யாழ்.ஆயருடன் எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு!

வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என யாழ் மறை மாவட்ட ஆயர் எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வடக்கில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள நிலையில் , இன்றைய தினம் (புதன்கிழமை) தன்னுடைய பிறந்ததினத்தினை முன்னிட்டு, யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரீன் பேனாட் ஞானப்பிரகாசம் அவர்களை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றதுடன் , ஆயருடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டு இருந்தார்.

அதேவேளை ஆயர் இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட ஆசீர்வாத பூசை மேற்கொள்ளப்பட்டது.

அதன்போது, முன்னாள் அமைச்சர் புத்திக பத்திரன, இரான் விக்ரமரட்ன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் மறை மாவட்ட ஆயர்,

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் இன்று என்னை சந்தித்து கலந்துரையாடினார். அவர் தன்னாலான முயற்சியினை மேற்கொண்டு அபிவிருத்தி வேலைகளை செய்து வருகின்றார். ஏற்கனவே எதிர்கட்சியில் இருந்தவர்கள் இவ்வாறு அபிவிருத்தி வேலைகள் செய்யவில்லை. ஆகவே அவருடைய அந்த பணியினை பாராட்டவேண்டும். எத்தனையோ வைத்தியசாலைகளுக்கு சிறுநீரக நோய்க்குரிய இயந்திர தொகுதிகளை வழங்கியுள்ளார். அத்தோடு பாடசாலைகளுக்கும் உதவிகள் வழங்கி வருகின்றார். சுகாதாரமும் கல்வியும் அவருடைய முக்கிய குறிக்கோளாக காணப்படுகின்றது.

அவ்வாறு ஈடுபடும் அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எங்களுடைய பிரச் சினைகள் அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.

நான் மூன்று விடயங்களை குறிப்பாக குறிப்பிட்டேன். அதாவது, கல்வி, மீன்பிடி, விவசாயம் இந்த மூன்று துறைகளையும் வடக்கில் அபிவிருத்தி செய்ய வேண்டும். அத்தோடு இந்த இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனை ஒரு பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது. அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரினேன். அதற்கு அவர் அரசாங்கத்தில் இருப்பவர்கள் தான் அதனை செய்ய முடியும்” என தெரிவித்தார் என்றார்.

Recommended For You

About the Author: Editor