யாழ்ப்பாண இளைஞர் இந்தோனேசியாவில் இடம்பெற்ற விபத்தில் பலி

அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரிச்சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்தோனேசியாவில் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – குருநகரைச் சேர்ந்த 36 வயதான ஜோன்சன் ஜேசுதாஸ் ஜெயதேவ் என்ற இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் 1990 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து தமிழகத்தில் உள்ள அகதி முகாம் ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

2010 ஆம் ஆண்டு முதல் வௌிநாடு செல்வதற்கு முயற்சித்து வந்துள்ளார்.

இந்நிலையில், படகின் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டதனால் கைது செய்யப்பட்டு, இந்தோனேசியாவின் ஜகர்த்தா தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

கடந்த செவ்வாய்கிழமை(17) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் – மீசாலையைச் சேர்ந்த 32 வயதான இராஜேந்திரன் ரஜீவ் என்பவர் அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சென்றபோது கைது செய்யப்பட்டு, பப்புவா நியூகினியா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 29 ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது சடலம் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Posts