வடக்கில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தண்ணீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வேண்டுகோள் விடுத்தார் .
கடந்த செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவன பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார் .
இச்சந்திப்பின் போது அவர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் எனவே மாவட்ட நீர்வள முகாமைத்துவக் குழு எதிர்காலத்தில் நீர்வளத்தை பேண சில தந்திரோபாயங்களை மேற்கொண்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார் .
மேலும் தற்போது பயிர் செய்கைக்கும் , குடிதண்ணீருக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது . தீவுப் பகுதிகளில் வாழும் மக்கள் தண்ணீரை கொள்கலன்கள் – வான்கள் என்பவற்றின் மூலம் பெற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார் .
தண்ணீர் தட்டுப்பாட்டினைத் தவிர்ப்பற்கான ஏற்பாட்டினை முன்னெடுக்க சம்மதம் தெரிவித்துள்ள பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனத்தினர் அதன் முதற்கட்டமாக தீவுப் பகுதிகளுக்கான வசதிகள் செய்வதாகவும் உறுதியளித்துள்ளனர் என அரச அதிபர் தெரிவித்துள்ளார்