யாழ்ப்பாணம் உள்ளிட்ட எட்டு பல்கலைக்கழகங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தொழில்நுட்ப பீடங்களை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக அனுமதி 5 வீதத்தால் அதிகரிக்கின்றது. இந்நிலையில், பட்டப்படிப்பை தொடரும் அனைத்து மாணவர்களுக்கும் முழுமையான வசதிகளை செய்துகொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், யாழ்ப்பாணம், தென்கிழக்கு, களனி, கொழும்பு, பேராதனை, ஊவா வெல்லஸ்ஸ, ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் சப்ரகமுவ ஆகிய பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பீடங்களை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கென இவ்வருடத்தில் 1,369 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதனைக் கொண்டு தொழில்நுட்ப பீடங்களை ஆரம்பிப்பதற்கும், 2017ஆம் மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கு தேவையான நிதியினை திறைசேரியிலிருந்து ஒதுக்கிகொள்வதற்கும், உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லஷ்மன் கிரியெல்லவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு, அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.