யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்கநிலை ஏற்படாதிருக்க எச்சரிக்கை விடுப்பு!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்கநிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் யாழ். மக்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அதிபர், “யாழ். மாவட்டத்தில் அண்மைய நாட்களில் கொரோனா தொற்று நிலைமை அதிகரித்துள்ளது. இந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் 150 பேருக்குத் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும். தற்போது, ஏனைய அனைத்துச் செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றது.

எனினும் பெரும் தொற்று ஏற்படும் நிலைமை உருவானால் மீண்டும் யாழ். மாவட்டம் முடங்கும் நிலை உள்ளது. எனவே, கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொது மக்களுடைய ஒத்துழைப்பு மிகமிக அவசியமான விடயமாகும்.

இடர் காலமாக இருக்கின்ற இக்காலப்பகுதியில் மிகவும் அவதானமாக பொதுமக்கள் செயற்பட வேண்டும். அதேபோல், அரச, தனியார் நிறுவனங்களும் தங்களுடைய பாதுகாப்பையும் பொது மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor