தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. முன்னறிவித்தல்கள் ஏதுமின்றி இரகசியமாக, திடீரென நேற்று யாழ்ப்பாணம் வந்தார் சந்திரிகா குமாரதுங்க. கிழக்கு அரியாலை மற்றும் அச்சுவேலிப் பகுதிகளுக்குச் சென்ற அவர் போரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசினார்.
“தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு பற்றி நான் பல காலங்களாகப் பேசி வருகின்றேன். இன்றும் அதனைத்தான் கூறுகின்றேன். தமிழ் மக்களுக்கு அவர்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதற்கான அரசமைப்பு ஒன்றை வரைந்து நான் அதனை நாட்டுக்கு முன்வைத்தேன். அது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதில் தமிழ் மக்களுக்கு நிறைய அதிகாரங்கள் வழங்கப்பட்டன. தனிநாடு அல்ல. ஆனால் நிறைய அதிகாரங்கள். அவை வழங்கப்படவேண்டும் என்றே நான் இன்றும் விரும்புகின்றேன்.
அடுத்து இந்தப் பிரதேசம் மிக வேகமாக அபிவிருத்தி செய்யப்படவேண்டும்” என்று தெரிவித்தார் சந்திரிகா குமாரதுங்க.
அரியாலை கிழக்கு நாவலடி, அச்சுவேலி மேற்கு செல்வ நாயகபுரம் தந்தை செல்வா சனசமூக நிலையம் ஆகிய பகுதிகளுக்கு பயணம் செய்து கடந்த வருடம் அங்குள்ள மக்களுக்கு ஷா நிறுவனம் வழங்கிய சூரிய மின் கலங்களின் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்ததுடன் மக்களின் தேவைகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
முற்பகல் 11 மணிக்கு கிழக்கு அரியாலைக்கும் நண்பகல் 12 மணிக்கு நாவலடிக்கும் அவர் சென்றிருந்தார். வறுமைப்பட்ட குடும்பங்களில் உள்ள மாணர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் சுமார் 100 மாணவர்களின் குடும்பங்களுக்கு சூரிய மின் கலங்களை வழங்கிய அவர் அந்தக் குடும்பங்களின் நிலை தொடர்பாகவும் கேட்டறிந்தார்.
1970, 1971 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த முன்னால் ஐனாதிபதி 40 வருடங்களின் பின்னர் நேற்று வருகை தந்ததை அடுத்து பொது மக்கள் இவரை ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டதுடன் இவரின் வருகையையிட்டுத் தாம் மகிழ்சியடையவதாகவும் தெரிவித்தார்.
வரவேற்பு நிகழ்வுகள் எதுவும் இடம்பெறாத நிலையில் ஷா நிறுவன அதிகாரிகளுடன் அப்பகுதிகளுக்கு அவர் சென்று மக்களுடன் அளவளாவினார்.
சந்திரிகா குமாரதுங்க உதயனிடம் மேலும் தெரிவித்தவை வருமாறு:
போர் முடிந்தமை குறித்து நான் மகிழ்சி அடைகிறேன். ஏனென்றால் வேறு வேறு அரசுகளின் கீழ் கடந்த 25 வருடங்களாக நடந்த போரால் இந்த மக்கள்தான் பெரிதும் வேதனைப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.
போர் அவர்களின் வாழ்க்கையை மிக மோசமாகப் பாதித்திருக்கிறது. வீதிகள், வீடுகள் என எல்லாவற்றையும் சேதமாக்கி இருக்கிறது போர். இங்கு பல வேலைகள் ஆற்றப்பட வேண்டியிருக்கிறது. அரசு மேலும் பல வேலைகளைச் செய்ய வேண்டி இருக்கிறது.
அத்துடன் தனிப்பட்ட அமைப்புக்கள், உதாரணத்துக்கு என்னுடையதைப் போன்றன மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பனவும் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உண்டு. அவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனாலும் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டியிருக்கிறது.
இந்த மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைத்து அவர்கள் இயல்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதைத்தான் நான் விரும்புகின்றேன்.
இங்கே பணிகள் இப்போது நகரும் வேகத்தைவிட விரைவாகச் செய்து முடிக்கப்பட்டிருக்கலாம்.
போர் முடிந்ததற்குப் பின்னரான காலத்தில் மிக விரைவாக இந்தப் பணிகளைச் செய்து முடித்திருக்கலாம். ஆழிப்பேரலையால் எமது கரையோரங்கள் பாதிக்கப்பட்டபோது எனது அரசு மிகத் துரிதமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றியது. அப்படி இங்கும் வேலைகள் வேகமாக, விரைவாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
போர் முடிந்ததன் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளில் தெற்கில் இருந்து பெரும் எண்ணிக்கையான மக்கள் சிங்களவர்கள் மற்றும் ஏனையவர்கள் இந்தப் பகுதிகளையும் மக்களையும் பார்ப்பதற்காக வந்து திரும்பியிருக்கிறார்கள். அவர்கள் சுற்றுலாப் பயணங்களாகவே மகிழ்ச்சிகரமான சுற்றல்களாகவே இங்கு வந்திருந்தார்கள். என்னிடமும் கேட்டார்கள், நீங்கள் போகவில்லையா என்று, நான் இல்லை என்று சொன்னேன்.
“வெற்றிகொள்ளப்பட்ட நிலங்களையும் தமிழ் மக்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு நாம் வரமுடியாது. அவர்களுக்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும். ஏனெனில் இந்த மக்கள் பல இராணுவங்களின் கரங்களாலும் புலிகளின் கரங்களாலும் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள்.
எனவே அவர்களது நல்வாழ்வுக்காக எதையாவது செய்த பின்னர்தான் நான் போவேன்” என்று அவர்களிடம் கூறினேன். எனவே எனது அமைப்பு மூலம் ஏழை மக்களுக்கு உதவிம் திட்டத்தை நிறைவேற்றினோம். 100 வீடுகளுக்கு சோலர் மூலம் மின்சாரம் விநியோகித்தோம். வேறு சிலவற்றையும் நாம் செய்ய இருக்கிறோம். அவற்றை முடித்துவிட்டுத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன்.
கடைசியாக 70களின் முற்பகுதியில் நண்பர்கள் சிலருடன் நான் இங்கு வந்திருந்தேன். யாழ்ப்பாணத்துக்கு சும்மா வந்திருந்தோம். 5 நாள்கள் இங்கே தங்கியிருந்தோம். இங்கு கடல் மிக அழகானது. நாங்கள் மக்களுடன் பேசினோம். பின்னர் 80களில் போர் ஆரம்பமானது. அதன் பின்னர் என்னால் வரமுடியவில்லை. பல தடவைகள் இங்கு வரவேண்டும் என்று நான் விரும்பியிருக்கிறேன். ஆனால் முடியவில்லை. இந்தப் பயணத்தில் என்னால் இங்குள்ள பெண்களுடன் பேச முடிந்தது.
அவர்களின் பிரச்சினைகளை அறிய முடிந்தது. பல பெண்கள் போரில் தங்களது கணவன்மார்களை இழந்துள்ளார்கள். எந்தவித வருமானமும் இன்றிப் பலர் தங்களது வாழ்க்கையைக் கடத்தவேண்டியவர்களாக இருக்கிறார்கள். பல இடங்களில் தற்காலிகமான கூலித் தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களை நம்பியே பல குடும்பங்கள் வாழ்வதைக் காணக்கூடியதாக இருந்தது.
எனவே இங்கு செய்ய வேண்டியவைகள் நிறையவே இருக்கின்றன என்றார் சந்திரிகா குமாரதுங்க.
மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் அடிப்படை வசதிகளும், சுதந்திரமான வாழ்வும் கிடைக்கின்றதா என யாழ்ப்பாண மக்களிடம் வினவியுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, தமிழ் மக்களுக்கு உதவுவதற்கு தான் இப்போது விரும்பமாகவுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
மேலும்,மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் அடிப்படை வசதிகள் கிடைக்கின்றனவா? மக்கள் இப்போது சுதந்திரமாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளதா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் இந்த ஆட்சியின் திருப்தி தொடர்பாகவும், இன்னமும் நிறைவு செய்யப்பட வேண்டிய தேவைகள் குறித்தும் அவர் மக்களிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
எனினும் இந்த விஜயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. மிகவும் இரகசியமான முறையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதேவேளை யாழில் உள்ள சில வழிபாட்டுத் தலங்களுக்கும் விஜயம் செய்திருந்த அவர் வழிபாட்டிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.