யாழில் 3,399 பேர் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பம்

Suntharam arumai_CIயாழ். மாவட்டத்தில் இந்த வருடம் 3,399 பேர் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளதாக யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் இன்று தெரிவித்தார்.

ஆட்பதிவு திணைக்களத்தின் புள்ளிவிபரத்தின் படி ஜனவரி மாதத்தில் 1,603 விண்ணப்பங்களும், பெப்ரவரி மாதம் 1,796 விண்ணப்பங்களும் ஆட்பதிவு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதனடிப்படையில் ஜனவரி மாதம் 270 புதிய விண்ணப்பங்களும் 648 திருத்தத்திற்கான விண்ணப்பங்களும் 321 தொலைந்த விண்ணப்பங்களும் 127 பாடசாலை மாணவர்களின் விண்ணப்பங்களும் 237 ஒரு நாள் சேவை விண்ணப்பங்களும் பெப்ரவரி மாதத்தில் 326 புதிய விண்ணப்பங்களும் 701 திருத்தத்திற்கான விண்ணப்பங்களும் 353 தொலைந்த விண்ணப்பங்களும் 175 பாடசாலை விண்ணப்பங்களும் 241 ஒருநாள் சேவை விண்ணப்பங்கள் உட்பட 3,399 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு கொழும்பு ஆட்பதிவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில், பாடசாலை மாணவர்களின் அடையாள அட்டை விண்ணப்பங்கள் குறைவடைந்துள்ளதாகவும் 16 வயதினை பூர்த்தியடைந்த மாணவர்கள் அடையாள அட்டையினை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை பாடசாலை அதிபர் மூலமாகவோ அல்லது கிராம சேவையாளர் ஊடாகவோ விண்ணப்பித்துக் கொள்ளுமாறும், யாழ். மாவட்ட செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.