யாழ். மாவட்டத்தில் 100 ஆசிரியர்கள் வரை மனநோயாளிகளாக உள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையில் இரண்டாவது நாளாக நெற்று செவ்வாய்க்கிழமையும் (27) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘யாழ். மாவட்டத்தில் 100 ஆசிரியர்கள் வரையில் மனநோயாளிகளாக உள்ளதுடன், இவர்களை கட்டாய ஓய்வில் செல்ல வைப்பதற்காக வைத்திய அதிகாரிகளிடம் மனநோய் சான்றிதழ்களை தருமாறு கேட்டிருந்தோம்.
எனினும் இதற்கு வைத்திய அதிகாரிகள், இவ்வாறு சான்றிதழ்கள் தரமுடியாது எனவும் இவர்களுக்கு இவ்வாறு சான்றிதழ்களை வழங்கினால் இவர்களால் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பிரச்சினைகள் உருவாகும் எனவும் தெரிவித்திருந்தனர்’ என்றார்.
இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், இவர்களால் மாணவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதே. இதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையா எனக் கேட்டார்.
இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர், இவர்களை ஆசிரியர் பணியிலிருந்து விடுவித்து வலயக் கல்விப் பணிமனைகளின் நிர்வாக பணிகளினுள் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை தற்போது தாம் எடுத்துள்ளதாகவும் கூறினார்.