யாழில் விடுதிகளில் நடைபெறும் விபச்சாரம் மற்றும் போதைப் பொருள் விற்பனைக்கு பொலிஸார் உடந்தையாக செயற்படுவதாகவும் அதற்கு போதுமான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் யாழ்.பிரதேச செயலாளர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரம் தெரிவித்தார்.
யாழ். நீதிமன்றத்திற்கு அருகில் போட் என்ற பெயரில் இயங்கி வருகின்ற தனியார் விடுதி ஒன்றில் கலாசார சீரழிவில் ஈடுபட்ட மாணவியையும், இளைஞனையும் பிடித்தமைக்காக பிரதேச செயலாளர் மீது வழக்குத் தாக்கல் செய்யவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக யாழ் பிரதேச செயலாளர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார்.
யாழ் பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி குறித்த சம்பவம் தொடர்பாக தம்மிடம் விபரம் கோரியதாகவும் இதனையடுத்து, யாழ் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சம்பவம் தொடர்பாக தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் யாழ். பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.
போட் என்ற விடுதியை வியாபார நோக்கத்திற்காக பதிவு செய்ய விண்ணப்பித்திருந்த நிலையில் அதனைப் பார்வையிடச் சென்றபோது கையில் கொப்பியுடன் ஒரு மாணவி,அறையில் இளைஞனுடன் இருந்ததைக் கண்டு சிறுபிள்ளை எனற காரணத்தினால் மாணவியுடனும், இளைஞனுடம் பேசிய போது இருவரும் வேறுபட்ட தகவல்களை வெளியிட்டதை தொடர்ந்து மாணவியை தனியாக அழைத்துவந்து பெற்றோரிடம் ஒப்படைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பாடசாலை மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்ததை கைது செய்து வந்ததாக குறிப்பிட்டு தம்மீது வழக்குத்தாக்கல் செய்ய சமன் சிகேரா முயற்சிப்பதாகவும் பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
போட் விடுதி தொடர்பாக போதைப்பொருள் விற்பனை செய்யும் இடமாக விளங்குவதாக பல முறைப்பாடுகள் ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பிரதேச செயலர் சுகுணரதி தெய்வேந்திரம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கலாசார சீரழிவு நடைபெற்ற விடுதியை நடாத்தி வந்தவர்கள் யாழ். பொலிஸார் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே யாழ் பொலிஸார் இவ்வாறு நடத்து கொண்டதாக தெரியவருகின்றது.
கலாசார சீரழிவைத் தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய பொலிஸார் விபச்சார நிலையம் போன்று தமது விடுதியை நடாத்திக் கொண்டிருக்கும் விடுதி உரிமையாளர்கள் செய்த முறைப்பாட்டினை அடுத்து பிரதேச செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க முற்படுவது கண்டிக்கத்தக்கது என பொதுமக்கள் கருத்துத்தெரிவிக்கின்றனர்.