யாழில் வடக்கு தெற்கு மாணவர்களின் ஒன்றுகூடல்

வடமாகாண சபை, வடமாகாண ஆளுநர் செயலகம், மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனம் என்பன இணைந்து தமிழ் – சிங்கள இனங்களுக்கிடையில் சமத்துவ ஒற்றுமையினைக் கட்டி எழுப்பும் வகையிலும் ,நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையிலும் “பனை ஓலையும்,தென்னை ஒலையும்” எனும் தொனிப்பொருளிலான தமிழ்- சிங்களப் புத்தாண்டு விழாவை ஏற்பாடு செய்து நடாத்துகின்றன.

தென் மாகாணத்திலிருந்து 100 மாணவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (22-04-2016) காலை-6.30 மணிக்கு கொழும்பிலிருந்து யாழ். தேவி ரயிலில் புறப்பட்டு நேற்று மாலை யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலையத்தை வந்தடைந்தனர்.

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த சிறார்களை வரவேற்றார். தெற்கிலிருந்து வருகை தந்த மாணவர்களுக்கு யாழ். புகையிரத நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொழும்பிலிருந்து வருகை தந்த மாணவர்களுடன் வடமாகாணத்தைச் சேர்ந்த 200 மாணவர்களையும் இணைத்து யாழ். கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்தில் வடக்கு- தெற்கு மாணவர்களின் ஒன்றுகூடல் மற்றும் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.

இதேவேளை , இன்று சனிக்கிழமை காலை 8 மணியளவில் வடக்குத் தெற்கு மாணவர்களின் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி யாழ்.பேருந்து தரிப்பிட நிலையத்திலிருந்து யாழ். மாவட்டச் செயலகம் வரை ஊர்வலம் நடாத்தப்படவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டம் மற்றும் மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் என்பன நடைபெறும்.