யாழில் மேர்வின் சில்வா!

mervin-visttojaffnaதமிழ் மக்களுக்கு விரோதமான எந்த விடயத்தினையும் ஜனாதிபதி செய்யமாட்டார். தமிழ் மக்கள் அவர் மீது முதலில் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் அமைச்சர் மேர்வின் சில்வா யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார்.

நேற்று மாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் யாழ் கொடிகாமம் பகுதியில் சுதந்திரக்கட்சியின் வேட்பாளர்களால் மக்களின் பலத்த ஆதரவுடன் வரவேற்று அழைத்து வரப்பாட்டார்.

சாவகச்சேரிக்கு நகருக்கு வருகை தந்த அமைச்சர் பேரூந்து நிலையம், வர்த்க நிலையம் என்பவற்றிக்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக சாவகச்சேரியில் அமைக்கப்பட்ட சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தினையும் திறந்து வைத்தார்.

சாவகச்சேரி பிரதேச வைத்தியசாலைக்குச் சென்ற அமைச்சர் அங்கு ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட விடுதிகளைப் பார்வையிட்டதோடு அங்கிருந்த சிறுவர்களை தூக்கி ´வாங்க மச்சான் வாங்க´ என்ற பாடலைப்பாடி மகிழ்வித்தார்.

யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் மேர்வின் சில்வாவை சாவகச்சேரியில் உள்ள சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடும்போதே இதனை அவர் தெரிவித்தார்.

வருகை தொடர்பில் கேட்டபோது…

நான் மக்கள் தொடர்பாடல் அமைச்சர். நான் இங்கு வருவது பிழையில்லை. முப்பது வருடகாலமாக இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றுள்ளது. இதனால் மக்கள் பிரபாகரனுக்கு பயந்து வெளியில் வரமுடியாத நிலை காணப்பட்டது. அந்தக் காலத்திலும் நான் யாழ்ப்பாணம் வந்து சென்றிருக்கின்றேன். கடந்த 9 மாதங்களுக்கு முன்னமும் இங்கு வந்து சென்றிருக்கின்றேன்.

யுத்தம் முடிந்து அபிவிருத்தி நடைபெறும் காலத்தில் தமிழர்களிற்கான தீர்வு தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன என வினவியபோது…

முப்பது வருடகாமாக நடைபெற்ற யுத்தத்தினை முடிவுக்குகொண்டு வந்து நாடு அபிவிருத்தியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் வடக்கில் தெற்கை விட பாரிய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீதிகள், புகையிரதப் பாதைகள், வைத்தியசாலைகள் என்று பல்வேறு அவிபிருத்திப் பணிகள் நடைபெற்றுள்ளது. இதைவிட வேறு என்ன தேவை, அபிவிருத்தியே தீர்வு. விரும்பத்தகாத சத்திகளிடம் உள்ளுராட்சி சபைகளை ஒப்படைத்து இன்று அபிவிருத்திப் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். இனிவரும் காலத்தில் அவ்வாறான நிலை ஏற்படாத வகையில் தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றார்.

13ஆவது திருத்தம் தொடர்பில் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு,

பிள்ளை பிறப்பதற்கு முன்னர் பெயர் வைப்பதென்பது சாத்தியப்பாடானது அல்ல. அதேபோன்று 13 தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் அது பற்றி ஜனாதிபதி எந்த முடிவும் எடுக்காதவரை கருத்துக்கள் கூறமுடியாது. இருந்தாலும் தமிழ் மக்களுக்கு விரோதமான எந்த விடயத்தினையும் ஜனாதிபதி செய்யமாட்டார். தமிழ் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்று அவர் பதிலளித்தார்.