யாழில் முதலீட்டாளர் மாநாடு, ஆளுநர் முதலமைச்சருக்கிடையில் முறுகல்!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடாத்தப்பட்டால் அது முதலமைச்சருக்கும் ஆளுநருக்குமிடையில் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கலாம் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே எதிர்வரும் 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என அறிவித்திருந்தார்.

இந்த நடவடிக்கை ஆளுநருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சர்ச்சையை தோற்றுவிக்கலாம் எனத் தெரிவித்துள்ள அரசியல் ஆய்வாளர்கள், தன்னிச்சையாக இந்த மாநாட்டை ஏற்பாடுசெய்வதன் மூலம் ஆளுநர் முதலமைச்சரின் அதிகார வரம்புக்குள் ஊடுருவுகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இந்த விடயத்தை முதலமைச்சரிடம் தெரிவித்ததாகவும், அதற்கு முதலமைச்சர் ஆட்சேபம் எதனையும் தெரிவிக்கவில்லையெனவும் ஆளுநர் தெரிவித்திருந்தார்.

மத்தியரசு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு மாகாண சபையை மீறி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் கருத்து தெரிவித்து வருவதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் முதலீடு மேற்கொள்வதற்கான செயலகத்தை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்படவுள்ளது. மாகாண அலுவலகங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருப்பதால் அதனை மாகாண முதலமைச்சர் கட்டுப்படுத்தமுடியாது.

எனவே யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்பவர்களை மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை வடக்கு மாகாண முதலமைச்சர் ஏற்றுக்கொள்ளமாட்டார். இதனால் ஆளுநருக்கும் முதலமைச்சருக்குமிடையில் முறுகல் நிலை தோன்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor