யாழில் பெண்கள் அமைப்பு போராட்டம்: சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

courtயாழ். நீதிமன்றத்திற்கு முன்பாக வல்லமையை சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கான தளம் நேற்று கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தது.

யாழ். குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும் கடந்த சில மாதங்களாக பெண்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சம்பவத்தோடு தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கக் கோரியுமே இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஒக்டோர் மாதம் 17ஆம் திகதி அரியாலையைச் சேர்ந்த மார்க்கண்டு லோகராணி (42) என்பவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் யாழ். நாச்சிமார் கோவிலடியிலிருந்து யாழ்ப்பாணம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஆண் ஒருவரைக் கைது செய்த பொலிஸார், சந்தேக நபரை யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதன்போது குறித்த சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதனையடுத்து நேற்றய தினம் குறித்த சந்தேக நபரை பொலிஸார் யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது நீதிமன்றம் குறித்த சந்தேக நபருக்கான விளக்கமறியலை எதிர்வரும் 25ஆம் திகதி வரை நீடித்துள்ளது.

இந்நிலையில் குறித்த நபருக்கு தண்டனை வழங்கக்கோரியுமே ´வல்லமையை சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கான தளம்´ கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.