பாகிஸ்தான் புலனாய்வுத்துறை யாழ்ப்பாணத்தில் அவதானிப்பு நிலையமொன்றை நிறுவியுள்ளது என இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சிறிலங்கா அரசு மழுப்பல் போக்கில் பதிலளித்துள்ளது.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. கேள்வி நேரத்தின் போது,
‘பாகிஸ்தான் புலனாய்வுத்துறை யாழ்ப்பாணத்தில் அவதானிப்பு நிலையமொன்றை அமைத்துள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனவே, இது குறித்து அரசின் நிலைப்பாடு என்னவாக உள்ளது?’ என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரவையின் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவிடம் கேள்வியெழுப்பினார்.
‘இது பாதுகாப்பு சார்ந்த விடயமாகும்; உடன் பதிலளிக்க முடியாதுள்ளது. எனினும், நாம் அனைத்து நாடுகளுடனும் தொடர்புகளைப் பேணி வருகின்றோம் என்ற விடயத்தைத் தற்போது குறிப்பிடமுடியும்’ என அமைச்சர் பதிலளித்தார்.
- Thursday
- September 18th, 2025