யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத மூவர் வியாபார நிலையமொன்றின் மீது வாள்களை கொண்டு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த மூவரும் தாக்குதல் நடாத்திய சம்பவமானது அருகில் இருந்த மற்றுமொரு வியாபார நிலைய கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது…
நேற்று மாலை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பிரதான வீதியில் பூணாரிமரத்தடி சந்திக்கு அண்மையில் ஒரு பள்சர் மோட்டார் சைக்கிளில் மூவர் வந்துள்ளனர். இவர்கள் வந்திருந்த மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகள் ஸ்ரிக்கர் போன்ற ஒன்றால் மூடி மறைத்து ஒட்டப்பட்டுள்ளது.
அத்துடன் மூவரும் தமது முகங்களை கறுப்பு துணியால் முடியிருந்துள்ளனர். இவ்வாறு வந்தவர்களில் இருவர் குறித்த பகுதியில் இருந்த வியாபார நிலையமொன்றின் மீது தாக்குதலை நடாத்தியிருந்தனர்.
அத்துடன் மற்றுமொரு நபரை வாளினால் வெட்ட சென்றிருந்த போதும் குறித்த நபர் அவர்களிடமிருந்து தப்பிச் சென்றிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
மேலும் இத் தாக்குதல் சம்பவத்தில் குறித்த வியாபார நிலையமானது பகுதியளிவில் சேதமடைந்துள்ளது. அத்துடன் இவ் தாக்குதல் நடாத்த வந்திருந்தவர்கள் வயது குறைந்த இளவயதினராக காணப்பட்டதாகவும் நேரில் பார்த்த சிலர் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை குறித்த கும்பல் தாக்குதல் நடாத்தியமை மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சம்பவங்கள் அனைத்தும் அருகில் இருந்த வியாபார நிலையத்தின் கண்காணிப்பு கமாரவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொலிஸாருக்க தகவல் வழங்கப்பட்ட நிலையில் இச் சம்பவம் தொடர்பான விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.