யாழில் துவிச்சக்கர வண்டிகளுக்கு மின்விளக்கு பொருத்துவது கட்டாயமாக்க நடவடிக்கை

police_new_DSPயாழ். மாவட்டத்தில் துவிச்சக்கரவண்டிகளுக்கு மின் விளக்கு பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண இன்று தெரிவித்தார்.

யாழ். தலைமைப்பொலிஸ் நிலையத்தில் வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. யாழ். மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவி ஏற்ற முதலாவது பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

யாழில். துவிச்சக்கரவண்டிகளுக்கு மின் விளக்கு இல்லாத காரணத்தினால் அதிகமாக வீதி விபத்துக்கள ஏற்படுவதை நான் அவதானித்தேன். இரவு நேரங்களில், துவிச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்து வருவதனால் தூர இடத்தில் வரும்போது எதிரே வருபவரை அடையாளம் காண முடியவில்லை. அத்துடன், ஒழுங்கைகளில் இருந்து வந்து நிறுத்தாது, திடீரென பிரதான வீதிகளில் ஏறும் போது விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், எதிர்வரும் மாதங்களில் துவிச்சக்கர வண்டிகளுக்கு மின் விளக்குகள் பொருத்துவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆரம்ப காலத்தில் மின் விளக்குகள் பொருத்தப்படாத துவிச்சக்கர வண்டிகளுக்கு தண்டப்பணம் அறவிடப்படமாட்டாதென்றும், நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்ட பின்னர் தண்டப்பணம் அறவிடப்படுமென்றும் அவர் கூறினார். அதேவேளை, 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரதான வீதிகளில் துவிச்சக்கர வண்டி ஓடுவதற்கான அனுமதியில்லை என்றும் அவர் கூறினார்.

அத்துடன், துவிச்சக்கரவண்டியில் சமாந்தரமாக வீதிகளில் பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும், இவ்விரு விடயங்களையும் நடைமுறைப்படுத்த பொலிஸாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.