யாழில் கைதான 44 பேரும் தொடர்ந்து பூஸா முகாமில்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரை கைது செய்யப்பட்ட 47 பேரில் 44 பேர் பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தைத் தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் உட்பட பலர் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

பயங்கரவாதப் பொலிஸாரினால் கடந்த டிசெம்பர் மாதத்தில் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 46 பேர் தொடர்பாக இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தியக் கிளையில் அவர்களின் உறவினர்களால் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.

கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்ட ஒருவர் தொடர்பில் நேற்று முன்தினம் முறைப்பாடு பதிவாகியது. இதுவரையில் 47 முறைப்பாடுகள் மனித உரிமைள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் இரண்டு முறைப்பாடுகள் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பானவை. எஞ்சிய 45 பேரில் ஒருவர் வவுனியாவிலும் ஏனையோர் பூஸாவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான பெயர் விவரங்கள் மனிதஉரிமை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனஎன்றும் பிராந்திய இணைப்பாளர் தெரிவித்தார்.