யாழில் உள்ள இராணுவத்தினரின் ஹோட்டலுக்கு சர்வதேச விருது

army-hotelயாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வரும் தல்செவன ஹோட்டலுக்கு வர்த்தக முகாமைத்துவம், வியாபார உத்திகள் மற்றும் தரமான பெயர்சூட்டலுக்கான சர்வதேச விருது கிடைத்துள்ளது.

பிரான்சின் தலைநகர் பாரிசில் நேற்று நடைபெற்ற 17வது “International Star for Leadership in Quality Award” விருது வழங்கும் விழாவின் போதே இராணுவத்தின் தல்செவன ஹோட்டலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக 118 நாடுகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டன. பாரிசின் அரங்கில் Paris Etoile (Concorde La Fayette), Palais de Congress de Paris நடைபெற்ற இறுதிச் சுற்றில் விருதுக்குத் தகுதியான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

விருதுக்குப் பொருத்தமான நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடுவர்குழுவில் 74 நாடுகளைச் சேர்ந்த பொருளாதார மற்றும் வர்த்தக நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

தல்செவன ஹோட்டலுக்கான விருதைப் பெறுவதற்காக அதன் முகாமையாளர் மேஜர் ரிச்சர்ட் விக்கிரமாரச்சி பாரிசுக்குப் பயணமாகியுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.