பப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவை

NIcபப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான ‘அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவை’ நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பப்ரல் அமைப்புடன் ஆட்பதிவுத்திணைக்களமும் இணைந்து இந்த நடமாடும் சேவையினை மேற்கொண்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக கோப்பாய், சங்கானை, காரைநகர் ஆகிய பிரதேசத்தில் இந்த நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது.

நேற்று முதற் கட்டமாக கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பிரதேச செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் 350 ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு புதிய அடையாள அட்டையினைப் பெறுவதற்கு விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர்.

அடையாள அட்டை புதிதாக விண்ணப்பித்தல், தொலைந்த அடையாள அட்டைக்கான சமாதான நீதவானின் சத்தியக்கடதாசி, பொலிஸ் முறைப்பாடு, புகைப்படம் எடுத்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகளை மக்கள் சிரமமின்றி பெற்று தங்கள் அடையாள அட்டையைப் பெறக்கூடிய வகையில் இந்த நடமாடும் சேவை அமைந்துள்ளது.

இந்த நடமாடும் சேவையானது இன்று செவ்வாய்கிழமை கோப்பாய் பிரதேசத்திற்குட்ட அச்சுவேலி இராசமாணிக்கம் மண்டபத்திலும், புதன்கிழமை காரைநகர் பிரதேச செயலகத்திலும் வியாழக்கிழமை சாங்காணை பிரதேச செயலகத்திலும், வெள்ளிக்கிழமை சங்காணை பிரதேச செயலர் பிரிவிற்குட்டபட்ட அராலி பொது நோக்கு மண்டபத்திலும் இந்த நடமாடும் சேவை நடாத்தப்படவுள்ளது.

இந்த நடமாடும் சேவையில் பப்ரல் அமைப்பின் பிரதிநிதிகள், ஆட்பத்திவுத்திணைக்கள உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் நேரடியாக வந்து மக்களுடன் அடையாள அட்டை தொடர்பான விழிப்புனர்வை ஏற்படுத்தி இந்த சேவையை நாடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.