யாழிலிருந்து புறப்படும் தனியார் பஸ்களை இடைமறித்து ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு சென்ற தனியார் பேரூந்துகளை ஏ – 9 வீதியில் மறித்து ஏனைய தனியார் பேரூந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா தனியார் போக்குவரத்து சங்கத்தின் முறைகேடான போக்குவரத்துச்சேவை காரணமாக மாவட்டங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சேவைகள் பணிப் புறக்கணிப்பில் இன்று ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு இரண்டு தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

இவ்வாறு சேவையில் ஈடுபட்ட பேரூந்துக்களை பரந்தனில் ஒரு பேரூந்தையும் மற்றையதை மாங்குளத்திலும் மறித்த ஏனைய தனியார் பேரூந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள், வீதியின் குறுக்கே உறங்கியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்து விசாரணைகளின் பின்னர் விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.