யாழ். மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டீன் றொபின்சன் யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்தை அவரது இல்லத்தில் நேற்றயதினம் சந்தித்தார்.
இதன்போது, அவர், ‘இரு இனங்களையும் ஒன்று சேர்ப்பது தொடர்பாக ஏன் அக்கறை காட்டவில்லை?’ என யாழ். ஆயரிடம் கேள்வியெழுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ். மக்கள் சுதந்திரமாக தமது காரியங்களை செய்கின்றார்களா என கிறிஸ்டின் றொபின்சன் கேள்வி எழப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த யாழ்.ஆயர்,
‘யாழ். மாவட்ட மக்களுக்கு எதிர்பார்த்த அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. மக்கள் அரசியல் தீர்வினை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மக்களிடையே பேச்சு சுதந்திரம் இல்லை. சுதந்திரமாக மக்கள் தமது காரியங்களை செய்ய தடைகள் இருக்கின்றன. கடந்த வருடத்தில் நடத்தவிருந்த மாகாண தேர்தல் பிற் போடப்பட்டுள்ளதுடன், இந்த வருடமும் மாகாண தேர்தல் நடக்குமா என்பது சந்தேகமாக இருக்கின்றது.
இதேவேளை, இந்திய மீனவர்களின் இழுவைப்படகின் அத்துமீறல் செயற்பாட்டினால் இலங்கை கடற்பரப்பில் கடல் வளங்கள் சூரையாடப்பட்டு போகின்றன. இதற்கான தீர்வினை அரசாங்கம் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மக்கள் சிறு தொழில்களை நம்பி தமது வாழ்வினை கொண்டு செல்கின்றனர்’ என அவர் பதிலளித்திருந்தார்.
இச்சந்திப்பின்போது, யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலவரங்கள் குறித்து இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஆராய்ந்து சென்றுள்ளதாக ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை மேலும் கூறினார்.
இதேவேளை, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் இன்று மாலை யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு சென்று மேலதிக அரச அதிபர் ரூபினி வரதலிங்கத்தையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின்போது யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி, முன்னேற்றங்கள் குறித்த அவர் கேட்டறிந்துகொண்டதாக மேலதில அரச அதிபர் ரூபினி வரதலிங்கம் தெரிவித்தார்.
சிவில் நிர்வாக நடவடிக்கையில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் தலையீடுகள் குறித்தும் இயற்கை அனர்த்தங்களின் போது இராணுவம் பொலிஸாரின் பங்களிப்பு குறித்தும் தான் அவரிடம் எடுத்துக் கூறியதாக அரச அதிபர் தெரிவித்தார்.
தற்பொது மீன்பிடித்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதில் மாற்றத்தினை ஏற்படுத்தவேண்டும் என்றும் என்றும் கடந்த முறை விஜயத்தின் போது இருந்ததை விட யாழ். மாவட்டம் பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது என்றும் அவர் தெரித்ததாக மேலதிக அரச அதிபர் ரூபினி வரதலிங்கம் மேலும் தெரிவித்தார்.