யானைகளின் கடவைப் பாதைகளில் புகையிரதங்கள் வேகம் தணிக்க வேண்டும்:பொ.ஐங்கரநேசன்

யானைகள் இடம்பெயரும் கடவைப் பாதைகளில் புகையிரதப்பாதைகள் குறுக்கிடுகின்றன. இந்தப் பகுதிகளில் புகையிரதங்கள் வேகத்தைத் தணிக்க வேண்டும் என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

01

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு (16.08.2016) தலைமன்னார் – மதவாச்சி புகையிரதப் பாதையில் மெனிக்ஃபார்ம் அருகே புகையிரதம் மோதியதில் நான்கு யானைகள் உயிரிழந்தன. சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் பொ.ஐங்கரநேசன் புகையிரதத் திணைக்கள அதிகாரிகள், வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் இவ்விபத்துப்பற்றிக் கேட்டறிந்துகொண்டார். இதன்பின்னர் அங்கு ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்குறிப்பிட்டவாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அங்கு அவர் இதுபற்றித் தெரிவிக்கையில்,

யானைகள் வாழுகின்ற காடுகள் இன்று காடழிப்பாலும், புகையிரதப் பாதைகளாலும், பெருந்தெருக்களாலும் சிறுசிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. யானையொன்றுக்குத் தினமும் 100 இலீற்றர் தண்ணீரும், 150 கிலோ எடையுள்ள இலை தழைகளும் தேவைப்படுகின்றது. இவ்வளவு தண்ணீரையும் தீனியையும் ஒரு சிறிய காட்டுத்துண்டில் இருந்து பெறமுடியாது. இதனால்தான் யானைகள் அடுத்த காட்டுத்துண்டை நோக்கி இடம்பெயருகின்றன.

02

யானைகள் ஒருபோதும் வழித்தடங்களை மாற்றுவதில்லை. இதனால்தான் ஒரு காட்டுத்துண்டில் இருந்து இன்னொரு காட்டுத்துண்டுக்கு யானைகள் இடம்பெயரும் கடவைப்பாதையில் புகையிரத வீதிகளோ, தெருக்களோ குறுக்கிட்டால் அப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் குறித்த எச்சரிக்கைகள் செய்யப்படுகின்றன. இக்கடவைப் பாதைகளில் புகையிரதங்கள் மணித்தியாலத்துக்கு 15 கிலோமீற்றர் வேகத்தில் செல்ல வேண்டும் என்றும் உள்ளது. ஆனால், புகையிரதங்கள் இந்த வேகக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்காததாலேயே யானைகள் அநியாயமாக உயிர் இழக்கின்றன.

03

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வடக்கில் புகையிரதம் மோதியதில் 12 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. ஆசிய யானைகளில் இலங்கையில் உள்ளது தனித்துவமான ஒரு உப இனம். ஒரு காலத்தில் 20,000 வரை இருந்த இவை இப்போது ஐயாயிரத்துக்கும் கீழாகக் குறைந்திருப்பதால் அழியும் உயிரினங்களின் பட்டியலில் இலங்கை யானைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும், புகையிரதத்தால் யானைகள் மரணமாவதைத் தடுப்பதற்கு கடவைப்பாதைகளில் புகையிரதங்கள் வேகத்தைத் தணிக்க புகையிரதத் திணைக்களம் ஆவன செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

07
மேலும் படங்களுக்கு..

Related Posts