வலி.வடக்கு மக்களை அவரவர் நிலங்களில் விரைவில் முழுமையாகக் குடியமர்த்துங்கள்.இல்லையேல்,கடந்த அரசுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடியதைப் போல் விரைவில் வீதியில் இறங்கிப் போராடத் தயங்கமாட்டோம் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம்.
வலி.வடக்கு மக்கள் அவர்களது சொந்த நிலங்களை விட்டு இடம்பெயர்ந்து இன்றுடன் 25 வருடங்கள் பூர்த்தியாகின்றன.அதனை முன்னிட்டு வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் ஓர் அறிக்கையை அனுப்பி வைத்துள்ளார்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1990ஆம் ஆண்டு ஜீன் மாதம் 15ஆம் திகதி தொடங்கிய அவலவாழ்வு,26ஆவது ஆண்டிலும் நீடிக்கின்றது.38 நலன்புரி நிலையங்களிலும்,நண்பர்கள்,உறவினர்கள் வீடுகளிலும் அகதிகளாக எமது மக்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் மக்களின் அகதி வாழ்வு முடிவுக்கு வரவில்லை.
எமது மக்கள் சகலவற்றையும் இழந்து சீரழிந்து நிலையில் இருக்கின்றார்கள். 20 சதுர அடி முகாம் வீடுகளில் அவர்களது 25 வருட வாழ்க்கையும் முடிங்கிப் போயுள்ளது.வாழ்வாதாரம் இன்றி தமது பிள்ளைகளின் எதிர்காலம் என்னவென்று தெரியாத நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.