மூவின மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால் அதிகார பகிர்வினை அடைய முடியும்: திஸ்ஸ விதாரண

thissaகாணி பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பாக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால், மாத்திரமே அதிகார பகிர்வுக்கான தீர்வினை அடைய முடியும்’ என்று லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘2009 ஆம் ஆண்டு சர்வ கட்சியின் அறிக்கை வெளியிடப்பட்ட போது, ஜனாதிபதி எந்த விதமான பதிலையும் வெளியிடவில்லை. இதுவரை காலமும் நாம் சர்வகட்சியின் அறிக்கை தொடர்பாக கேட்ட போது, அவர் பதிலளிக்காது மௌனமாக இருந்தார்.

அதன் பின்பு நாடாளுமன்ற தெரிவுக்குழு தெரிவு செய்யப்பட்டது. அந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கூட எனக்கு இடமில்லை. அது பற்றி எனக்கு கவலை இருந்தாலும், அதிகார பகிர்வு குறித்து தெற்கு மக்களிடையே பயம் இருக்கின்றது. அந்த பயத்தினை குறைப்பதற்கு ஊடகங்கள் உதவவேண்டும்.

காணி பொலிஸ் அதிகாரங்களை பறிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. காணி, பொலிஸ் அதிகாரங்களை தப்பாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள். அந்த விடயத்தில், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் தெளிவுடன் இருக்க வேண்டும்.

சர்வக்கட்சியின் விடயங்களையும் காணி பொலிஸ் அதிகாரங்களையும் ஜக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள்தான் கதைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

அதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கின்றவர்கள் கதைத்து பேச வேண்டும். அவ்வாறு பேசப்படுமானால், அதிகார பகிர்வு தொடர்பாக மக்களுக்கு இருக்கும் பயத்தினை நீக்க முடியும்.

யுத்தம் முடிவடைந்து 4 வருடங்களில் இனப்பிரச்சினை மற்றும் அதிகார பகிர்வினை தீர்வுக்கு கொண்டு வர முடியாது. இருந்தாலும், மெதுவாக பேசி தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

அதேவேளை, இலங்கை தேசத்தில் உள்ள அனைத்து மக்களிடையே தேசியம் மற்றும் ஒற்றுமை, புரிந்துணர்வின் மூலமே தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும்’ என்று அவர் மேலும் கூறினார்.