பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் யாழ்ப்பாணத்தில் நேற்றுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.அவர் என்ன காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டார் என்பது பொலிஸாரால் தெரிவிக்கப்படவில்லை. இவருடன் சேர்ந்து கடந்த மூன்று வாரங்களில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் 39 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சுன்னாகம் மின்சார நிலைய வீதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் சிவாகினி (வயது 40) என்ற பெண் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.
சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாக அதன் யாழ். மாவட்ட இணைப்பாளர் தெரிவித்தார். ஆனால் பெயர் விவரங்களை அவர் வெளியிடவில்லை.
இந்தக் கைதுடன் யாழ்ப்பாணத்தில் 36 பேர் கடந்த மூன்று வாரங்களில் பயங்கரவாத விசாரணைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் மூவர் கிளிநொச்சி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நெல்லியடிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் என்ன குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் மீது என்ன விசாரணைகள் அல்லது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்து அதிகாரிகள் இதுவரையில் எந்தவொரு முழுமையான தகவலையும் வெளியிடவில்லை.