மூன்றுபேர்கொண்ட குடும்பத்திற்கு ரூ.7500 போதுமானது: அமைச்சர் பந்துல

மூன்று பேரினைக் கொண்ட குடும்பமொன்று வாழ்வதற்கு மாதாந்தம் ரூபாய் 7500 வருமானம் போதுமானதென கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.ஹோமாகம, முல்லேகமவில் மகப்பேற்று மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றை நேற்று திங்கட்கிழமை திறந்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் பந்துல மேற்படி கூறினார்.அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

அரசாங்கம் வரவு-செலவு திட்ட வரிமூலமான வருமானமாக 1000 பில்லியன் ரூபாவினை மாத்திரமே பெறுகிறது. இது உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அரிதாகவே இருக்கும். ஆகையினால் வெளிநாட்டு கடனுதவிகளை நாடவேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசாங்கம் இருக்கிறது. நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, விமானநிலையம், வைத்தியசாலை, துறைமுக அபிவிருத்தி போன்றவற்றுக்கு இந்த வெளிநாட்டு கடனுதவிகள் பெரிதும் உதவுகின்றன. வெளிநாட்டு கடனுதவிகளை பெறும்வரையில் உள்நாட்டு அபிவிருத்திகள் சாத்தியமாகாது.

விவசாய அமைப்புகள் நெல் விலையை அதிகரிக்கக் கோருகின்றன. நெல் கொள்வனவு விலையினை 5 நிமிடங்களின் அமைச்சரவை தீர்மானத்தினை பெற்று 100 ரூபாயாக அதிகரிப்பது இலகுவானது. ஆனால் விவசாயிகள் ஒருவிடயத்தினை நன்கு உணர வேண்டும். நெல் கொள்வனவு விலையினை நாங்கள் அதிகரித்தால் அரிசியின் விலை 200 ரூபாவினை தாண்டிவிடும். நிர்வாக திட்டமிடல் என்பது போஸ்டர் ஒட்டுவதுபோல் இலகுவானதல்ல. அரிசியினால் பல அரசாங்கங்கள் மாறிய வரலாறும் உண்டு.

அரிசி விலை அதிகரிக்காது என்று நாங்கள் கூறவில்லை. பொருட்களின் விலையதிகரிப்புக்கு ஏற்ப சம்பளமும் அதிகரித்து வந்துள்ளது. அன்று அரச உத்தியோகத்தரின் சம்பளம் 80 ரூபாவாக இருந்தது. ஆனால் இப்போது அது பல மடங்காக அதிகரித்திருக்கிறது. இது பொருட்களின் விலையேற்றத்தினால் ஏற்படுத்தப்பட்ட மாறுதல் என்பதை உணர வேண்டும்.

கல்வி திணைக்களத்தினால் பல பாடசாலைகளில் மாணவ விடுதிகள் இயங்குகின்றன. இங்குள்ள மாணவர்களுக்கு மூன்றுவேளை உணவு கொடுத்து, இரண்டுவேளை தேநீரும் கொடுக்கப்படுகிறது. இதற்கு ஒரு மாணவனுக்கு செலவாவது வெறும் 2500 ரூபாய் மாத்திரமே. இதனடிப்படையில் மூன்று அங்கத்துவர்களைக்கொண்ட குடும்பமொன்று புத்திசாலித்தனமாக வாழ்வதற்கு 7500 ரூபாய் போதுமானதாக இருக்கும். ஆனால், பெரும்பாலானவர்கள் ஆடம்பரங்களை விரும்புகிறார்கள். உணவு விடுதிகளின் சாப்பிடுவதையும் அனாவசியமாக செலவு செய்வதிலேயுமே பலர் காலம் தள்ளுகின்றனர். அண்மையில் ஒரு நட்சத்திர விடுதி விருந்துபசாரத்திற்கு நான் சென்றிருந்தேன். அங்கு ஒருவருக்கான உணவு 6500 ரூபாயாக இருந்தது. இதுபோன்ற அனாவசிய, ஆடம்பர செலவுகளை நாம் தவிர்ப்பது சிறந்தது.

இலங்கையின் சனத்தொகையினைவிட கைத்தொலைபேசிகள் அதிகமாக இருக்கிறது. அதேபோல் ஆடம்பர வாகனங்களும் தாராளமாக இருக்கின்றன. இதனால்தான் வாழ்க்கைசெலவு அதிகம் என பலர் கூச்சலிடுகின்றனர். ஆகையினால், ஆடம்பரங்களையும் படோபகாரங்களையும் தவிர்த்து புத்திசாலித்தனமாக வாழ்ந்தால் நாடும் வளம்பெறும், நாமும் வளம் பெறுவோம் என்றார்.