மூன்றாவது தடவையும் மஹிந்தவே ஜனாதிபதி – அமைச்சர் குணரட்ண

amarakkoon-mahinthaஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் ஜனாதிபதியாகிவிட முடியாது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே மூன்றாவது முறையாகவும் போட்டியிடவுள்ளார். அவரே அடுத்தமுறையும் ஜனாதிபதி என்பதை நான் திட்டவட்டமாகக் கூறிக் கொள்கிறேன் என்றார் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன்.

கோப்பாய் அக்கரைப் பிரதே சத்தில் நேற்று நடைபெற்ற 48 குடும்பங்களுக்கான பொருள்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் உட்பட அவரது உறுப்பினர்கள் போர்க் காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கே ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

அவ்வாறு ஒத்துழைப்பு வழங்கும் போது பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தார் என்ற ஞாபகம் சம்பந்தனுக்கு வரவில்லை. எனவே நாம் இந்த பகுதியை ஒன்றிணைந்து உயர்த்த வேண்டுமானால் நாங்களும் நீங்களும் ஒன்று சேரவேண்டும்.

நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களித்தமை எங்களுக்குச் சந்தோசம். அத்தோடு தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து உறுப்பினர்களை ஆட்சியல் அமர்த்தினார்கள். அதுகுறித்தும் நாங்கள் சந்தோசப்படுகின்றோம்.

தற்போது வடக்கு மாகாண முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் கடமையாற்றுகிறார். அவரை நாங்கள் மதிக்கின்றோம் அவருக்கு நாங்கள் கெளரவமளிக்கின்றோம். மாகாண சபையின் அதிகாரங்கள் எவை என்பது பற்றி அவர் அறிந்திருப்பார் என்று நான் நினைக்கிறேன்.

ஒரு மாட்டு வண்டியிலேயே ஒரு எருமை மாட்டையும் ஒரு கடா ஆட்டையும் கட்டினால் அவை சேர்ந்து நன்றாகப் பயணிக்க முடியாது. இதுபோன்றல்லாது மத்திய அரசும் மாகாண சபையும் சேர்ந்து செயற்பட்டால் மட்டுமே அபிவிருத்தியை அடையமுடியும் என்றார்.