மூனைச் சந்திக்க முதலமைச்சர் சி.விக்கு வாய்ப்பில்லை

எதிர்வரும் 31ஆம் திகதி புதன்கிழமையன்று, இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன், இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட மாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் மூன், யாழ்ப்பாணத்துக்கும் சென்று, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இதன்போது, வடமாகாண முதலமைச்சரைச் சந்திப்பதற்கானதொரு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பதுடன், அவர் மூனைச் சந்திக்க வேண்டுமாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடனேயே அதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக்கொள்ள முடியுமென்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கூட்டமைப்புக்கும் முதலமைச்சருக்கும் இடையில் நிலவும் கருத்து வேறுபாடுகள், அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது எனக் குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும், ஐ.நா செயலாளர் நாயகத்தின் இலங்கை விஜயமானது, நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மேம்பட வழிசமைக்கும் என்று தெரிவித்துள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திச்சேவை, ஐ.நாவின் முன்னாள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையை, மூனின் விஜயம் சீர் செய்யும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், நவநீதம்பிள்ளையின் பதவிக் காலத்தின் போது, இலங்கைக்கும் ஐ.நாவுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியிருந்தது என்றும், அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor