Ad Widget

“முல்லை, கிளி. விகாரைகளை சுவாமிநாதன் அகற்றுவாரா?”

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் தற்போது அமைக்கப்பட்டு வரும் விகாரைகளை தடுத்து நிறுத்த, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

வடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் அகற்ற முடியாது. எனினும், புதிதாக அமைக்கப்படவுள்ள பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகள் தொடர்பில் தனக்கு அல்லது அரசாங்கத்துக்கு முறையிட்டால், நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“முல்லைத்தீவு- கொக்கிளாய், கருணாட்டுகேணி பிள்ளையார் கோவிலை இடித்துவிட்டு, தற்போது விகாரை அமைக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயம் அருகே, சுவாமி வீதி வலம் வரும் வீதியை ஆக்கிரமித்து, விகாரை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல்கள் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அமைச்சர் சுவாமிநாதன், அவை கட்டி முடிக்கப்பட்ட பின்னர் அகற்ற முடியாது எனக் கூறுவாரா?

வடக்கில் பௌத்தர்களே இல்லாத இடங்களில் விகாரை அமைப்போர் தமக்கும், தமிழ் மக்களுக்கும் சொல்லிவிட்டு அவற்றை அமைப்பதில்லை. கனகாம்பிகை அம்மன் ஆலயம் அருகே, தறப்பாள்களினால் மறைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் விகாரையை அமைத்து வந்தாக தெரிவித்த அவர், குறித்த விடயத்தை தாங்கள் பல இடங்களில் தெரியப்படுத்திய போதிலும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை” என அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts