முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சின் முக்கிய பொறுப்புக்கள்: முதலமைச்சர் விக்னேஸ்வரன் பகிரங்க அறிவிப்பு

முல்லைத்தீவுக்கு அமைச்சு கொடுக்கவில்லை என்று ஒரு சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், அம்மாவட்டத்திற்கு அமைச்சின் முக்கிய பொறுப்புக்களை வழங்கியுள்ளதாக வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

vickneswaran

முல்லைத்தீவில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட அன்ரன் ஜெகநாதனுக்கு புனர்நிர்மாணம், மக்கள் இணக்கப்பாடு, மீள் குடியேற்றம் என்பது தொடர்பான அமைச்சு பொறுப்பினை அவரிடம் முழுமையாக கொடுக்க தீர்மானித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

யாழ் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசலில் நேற்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மௌலவி எம்.ஐ. மஹ்மூத்தால் நடத்தப்பட்ட துஆ பிரார்த்தனையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இவை திடீர் முடிவல்ல. மாகாணசபைத் தேர்தலில் வெற்றியடைந்த ஒரு சில நாட்களில் இவை திட்டமிடப்பட்டவை. தேவை ஏற்படும் வேளையில் தேவையாவை அறிமுகமாகும்.

முல்லைத்தீவை நாம் புறம் தள்ளவில்லை. அது எமது அகம், இதை சிலர் அரசியலாக்கினர்.

எம் மக்களின் தீர்வு விடயத்தில் பாகுபாடு காட்ட சிலர் எத்தனித்தாலும், என் மனச் சாட்சிப்படி நான் அனுமதியேன், வரலாறுகள் யாரையும் ஒதுக்குவதில்லை.

சுயநலன்களால் சிலர் வரலாற்றால் ஒதுக்கப்படுகின்றனர், மக்களின் மீள் எழுச்சிக்கு பாகுபாடு என்பது இல்லை, சுய நலனுக்காக தூய்மையான மக்களை களங்கப்படுத்த முனைய வேண்டாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.