முரளிதரனுக்கு தமிழன் என்கின்ற அடையாளத்துடன் கருத்து வெளியிட தகுதியில்லை: ரவிகரன்

வடகிழக்கு மக்களின் அவலங்களையும் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் உயரிய நோக்கத்தையும் அறிந்திராத முத்தையா முரளிதரனுக்கு தமிழர் என்கின்ற அடையாளத்துடன் கருத்து வெளியிடுகின்ற தகுதி இல்லை’ என வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

murali-camaroon

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பதாவது,

‘தமிழரின் நியாயமான உரிமைப்போராட்டத்தை மோசமாக விமர்சித்தும் தமிழ்மக்களை விட சிங்கள மக்கள் தான் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர் எனவும் முரளிதரன் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

முத்தையா குடும்பத்திலுள்ள ஒருவருக்கு இசைப்பிரியாவின் கதியோ பாலச்சந்திரனின் கதியோ நேர்ந்திருந்தால், அப்போதும் இவ்வாறுதான் பேசுவரா?

எங்கள் சார்பான சர்வதேச விசாரணைகளின் போக்கைத் திசை திருப்பும் நோக்கில் தனது விளையாட்டு பிரபல்யத்தை பயன்படுத்தி வெளியிட்டுள்ள கருத்துக்கள் உலக மக்களிடம் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் துடுப்பாட்டமானது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்ற ஆயுதமே என்பது இதன் மூலம் பலராலும் உணரப்படுகின்றது.

தமிழ் மக்களின் நீண்ட போராட்ட வரலாறு அவருக்குத் தெரியுமா? எங்கள் மண் கண்ட உயர் அர்ப்பணிப்புக்களும் தியாகங்களும் தெரியுமா? உறவுகளைத் தொலைத்தோரின் அழுகுரல்கள் கேட்டிருக்கிறாரா? இன்றும் தொடரும் எங்கள் நில,வள அபகரிப்புக்கள் தெரியுமா? இசைப்பிரியாக்களின் கதறல்களும், பாலச்சந்திரன்களின் ஏக்கங்களும் அவருக்குத் தெரியுமா? எதுவுமே தெரியாது. இன்னமும் குண்டுகளின் சிதறல்களை உடலில் தாங்கி நடமாடுகின்ற எங்கள் மக்களைப்பற்றித் தெரியுமா?.

இவ்வாறான நடவடிக்கைகள் உலகத்தமிழர் மத்தியில் முரளிதரன் பெற்றிருந்த நன்மதிப்பை இழந்து இன்று கடும் கோபத்தையும் வெறுப்பையும் சம்பாதித்துள்ளார்.

தமிழர்களின் சாதனைச் சின்னமாக தன்னை நிலை நிறுத்த வேண்டியவர், தன்னை ஒரு துரோக அடையாளமாக வெளிப்படுத்தியுள்ளார் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.