முன்னாள் போராளிகள் 4500 பேருக்கு கடனுதவி வழங்குவதற்கான நிதியினை வழங்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.
யாழிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், யாழ். மாவட்ட பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைப்பட்ட முன்னாள் போராளிகளை கடந்த சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் பல்வேறு இழப்புக்களை சந்தித்த மக்களுக்கும் நஷ்ட ஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரச்சினைகள் குறித்து சிக்கி தவிக்காது கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் அவற்றினை தீர்த்துக்கொள்ள முன்வர வேண்டும்.
மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள் மீறப்படுதல் மற்றும் அடிமைப்படுத்தல் கூடாது. சட்ட விரோத செயல்களில் ஈடுபடாது, சமூகத்தில் நல்ல பிரஜையாக வாழ வேண்டும். அத்துடன், சமூகத்தில் இணைக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன’ என தெரிவித்தார்.