முதலமைச்சர் பதவிப்பிரமாணத்திற்கு பின்பே அமைச்சரவை தெரிவு

vicknewaran-tnaவடமாகாண சபை முதலமைச்சரின் பதவிப்பிரமானம் நிறைவுபெற்றதன் பின்னர் வடமாகாண அமைச்சரவை தொடர்பில் முடிவெடுக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபை அமைச்சர்களைத் தெரிவு செய்வது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்களின் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. அமைச்சரவை தெரிவு செய்வதற்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டம் தீர்மானம் எதுவும் எடுக்காத நிலையில் முடிவுற்றிருந்தது.

தொடர்ந்து சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரவை தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத்தலைவர் இரா.சம்பந்தன் ‘வடமாகாண சபை அமைச்சரவை தொடர்பில் முதலமைச்சரே முடிவெடுப்பார்’ என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், திங்கட்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் தான் முதலமைச்சராகப் சத்தியப்பிரமாணம் எடுத்த பின்னர் அமைச்சரவை தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் கூறிய கருத்தினை கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக்கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.