மீள்குடியேற்றம், காணி சுவீகரிப்பு: த.தே.கூ. இந்தியாவிற்கு கடிதம் ?

mavai mp inவலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள காணிகள் படையினரால் சுவீகரிப்பு செய்யப்படுவது குறித்து இந்தியாவிற்கு கடிதம் மூலம் அறிவிக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

வடக்கில் வாழும் மக்களின் நிலைப்பாடு தொடர்பில் இந்தியாவை தெளிவுபடுத்த கூட்டமைப்பின் சார்பில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

‘வலிகாமம் வடக்கு பகுதியில் இருந்து 22 வருடங்களுக்கு மேல் மக்கள் வெளியேற்றப்பட்டு தற்போதும் தனியார் நிலங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில் அகதி வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.

யுத்தம் முடிந்து நான்கு வருடங்களைக் கடந்துள்ளபோதும் குறித்த பகுதியில் வடபகுதியில் மக்கள் இன்னமும் அகதி வாழ்கை வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை நீடித்து வருகின்றது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘தங்களை தமது நிலங்களில் மீள்குடியேற்றுமாறு அமைதி வழியில் ஒரு ஜனநாயக வழிப்போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த மக்களை அவர்களின் சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோதும் இதுரை வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை மாறாக அப்பிரதேசம் விமானத்தளம் மற்றும் துறைமுக விஸ்தரிப்புக்காக அபகரிப்புச் செய்யப்பட்டு வருகின்றது’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘விமானத்தளம் விஸ்தரிப்பு மற்றும் துறைமுகங்கள் விஸ்தரிப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக கடல் பக்கமாக விஸ்தரித்து இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விமானத்தள விஸ்தரிப்பு மற்றும் துறைமுக விஸ்தரிப்பு பணிகள் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளதால் இது தொடர்பில் இங்கு வாழும் மக்களின் நிலைப்பாடு தொடர்பில் இந்தியாவிற்கு கூட்டமைப்பின் சார்பில் வலியுறுத்தவே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளது’ என்று மாவை எம்.பி மேலும் கூறினார்.

Recommended For You

About the Author: Editor