மீள்குடியமராதோர் எண்ணிக்கையை தீர்மானிப்பதில் அதிகாரிகளிடம் இழுபறி

thellipplai_poraddam_02யாழ்.மாவட்டதில் இன்னும் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ள உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பது தொடர்பில் அதிகாரிகளிடையே இழுபறி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராய மாவட்ட செயலகத்தில் கூட்டப்பட்ட கூட்டம் முடிவு ஏதும் எட்டப்படாத நிலையில் முடிவடைந்தது.

யாழ்.மாவட்டத்தில் மீளக் குடியமர்வு தொடர்பான விவரங்கள் பிரதேச செயலாளர்களினாலேயே அதிகரித்துக் காட்டப்படுவதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தார். இதனைப் பிரதேச செயலாளர்கள் அனைவரும் மறுத்தனர்.

மீளாய்வு செய்தால் இதைவிட எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இடம் பெயர்ந்தவர்கள் எவரும் இலங்கையில் இல்லை என்று அரசு உத்தி யோகபூர்வமாக அறிவித்து விட்டது.

வவுனியாவில் இருந்த மனிக்பாம் முகாம் மூடப் பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. எனினும் யாழ்ப்பாணத்தின் வலி.வடக்குப் பகுதி உட்பட வடக்கின் பல பகுதிகளைச் சேர்ந்த ஒரு லட்சம் வரையிலான மக்கள் இன்னும் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியவர்களாக உள்ளனர் என்று ஐ.நா.புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

யாழ்ப்பாணத்தில் மட்டும் 28ஆயிரம் பேர் வரையிலானோர் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் இது பொய்யானது என்று அரசு கூறுகின்றது. இதனையடுத்து எண்ணிக்கையை மீளாய்வு செய்ய மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் உத்தரவிட்டார்.

மீளாய்வுக் கூட்டம் நேற்றுமுன்தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இதில், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் மீளக் குடியமர வேண்டிய மக்கள் தொடர்பில் தவறான கணக்கு காட்டப்பட்டு வருவதாக அரச அதிபர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதேச செயலாளர்கள், 2005 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாகவே மீள்குடியமர்வு தொடர்பிலான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதைச் சுட்டிக் காட்டினார்.

பதிலளித்த மாவட்ட செயலர் “மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் மீளக்குடியமர்வுகளை நான் மேற்கொண்டிருக்கின்றேன். அங்கு மீள்குடியமர்வுக்கு பதிந்தவர்கள் மீளக்குடியமர்வு செய்யும் போது கட்டாயம் வருவார்கள்,ஆனால் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர வேண்டியவர்கள் என்ற எண்ணிக்கையில் காட்டப்பட்ட எண்ணிக்கையில் அரைவாசி கூட மீளக்குடியமர்வுக்கு வருகிறார்கள் இல்லையே’ என்று பதிலளித்தார்.

மீளக்குடியமர வருகின்ற மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமையே அதற்குக் காரணம் என்று கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வாறு அதிகாரிகள் மத்தியில் தொடர்ந்து எதிரும் புதிருமான கருத்துக்கள் பரிமாறப்பட்டதைத் தொடர்ந்து முடிவு ஏதும் இன்றி கூட்டம் முடிவடைந்தது.