மீனவர்களின் வாழ்வுரிமைக்காக உண்ணாவிரத போராட்டம் முன்னெடுப்பு

மீனவர்களின் வாழ்வுரிமையை கருத்தில்கொண்டு ‘போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு’ இன் தலைவர் வி.சகாதேவன் ‘எமது மீனவர்களின் வாழ்வுரிமைக்காக’ என்ற பெயரில் உண்ணாவிரத போராட்டத்தினை இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துள்ளார்.

யாழ். குருநகர் சவற்காலை சந்தியில் கொட்டகை அமைக்கப்பட்டு இவ் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவர் மீனவர்களின் வாழ்வெழுச்சிக்காக இரண்டு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கை கடற்பிரதேசத்திற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி பிரவேசித்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு சவால் விடும் வகையில் மீன்பிடியில் ஈடுபடுவதனை நிறுத்த வேண்டும். மீனவ சங்க நடவடிக்கைகளுக்கு கட்டுப்படாமல், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கையாண்டு எமது கடல் வளத்தை அழிக்கும் மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘கடந்த முப்பது வருட கால யுத்தத்தால் பல்வேறு இழப்புக்களையும், துயரங்களையும் சுமந்து பல்வேறு அழிவுகளை சந்தித்துள்ள எமது மீனவ சமூகம் யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்த பிறகும், இன்னமும் வாழ்க்கைச் சுமைகளை சுமக்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அரசாங்க உதவிகள் வாழ்வாதாரத் திட்டங்கள் முழுமையாக இன்னமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் எமது மீனவ சமூகத்தினை முற்றாக அழித்து விடும் என்ற நிலை உருவாகியுள்ளதால் நான் இந்த இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து எனது சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளேன்’ என அவர் இதன்போது தெரிவித்தார்.