மாவீரர் குடும்பங்களை பதியும் நடவடிக்கை ஆரம்பம்?

RegPenதென்மராட்சி பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து இறந்தவர்களின் குடும்பங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

தென்மராட்சியில், குறிப்பாக கொடிகாமம், மிருசுவில்,உசன், விடத்தற்பளை, தவசிகுளம் போன்ற பகுதிகளிலேயே இவ்வாறான பதிவு நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதிகளில் உள்ள மாவீரர் குடும்பங்களின் வீடுகளுக்கு செல்லும் இராணுவத்தினர் குடும்பத்தினரின் முழுமையான தகவல்களை கேட்டுப் பெற்றுக் கொள்வதுடன்,

தமது பிள்ளைகள் தொடர்பில், விடுதலைப் புலிகள் அமைப்பில் எப்போது இணைந்தார்? எப்போது இறந்தார்? இருந்தகாலம்? போன்ற விபரங்களை கேட்டுப்பதிவுசெய்வதுடன், தமிழீழ விடுதலைப் புலி அமைப்பில் இருந்து விலகியவர்கள் யாராவது இருக்கின்றனரா? அவ்வாறு இருந்தால் புனர்வாழ்வு பெற்றுள்ளாரா? போன்ற விபரங்களையும் இராணுவத்தினர் கேட்டு பெற்றுக் கொண்டு செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஏன் இவ்வாறு பதிவு செய்கின்றீர்கள் என்று மக்கள் கேட்டதற்கு, மேல் இடத்திலிருந்து வந்த உத்தரவுகளுக்கு அமையவே இவ்வாறான பதிவுகள் இடம்பெற்று வருகின்றது என குறித்த இராணுவத்தினர் தெரிவித்துச் செல்கின்றனர் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினரின் இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக அப்பிரதே மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.