மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின்மீது வாள்வெட்டுக்கும்பல் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக மானிப்பாய் தெரிவித்துள்ளனர்.
மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக்கும்பல் ஒன்று வீட்டின் கதவுகள், யன்னல்கள், என்பவற்றை அடித்து சேதமாக்கியதுடன், வீட்டினுள் இருந்த தொலைக்காட்சிப்பெட்டி உள்ளிட்ட வீட்டு உபகரண பொருட்களையும் அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளது.
அத்துடன் வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் அடித்து சேதமாக்கி விட்டு அங்கிருந்து குறித்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, மட்டுவில், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு வாள்வெட்டுக்குழுக்கள் அப்பகுதிகளில் உள்ள மூன்று வீடுகளின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் வாகனங்களையும் சேதமாக்கியுள்ளனர்.
அத்துடன், நேற்று முன்தினம் இரவு யாழில் உள்ள பல வீதிகளில் ‘ஆவா 001 ராஜ்ஜியம்’ என கறுப்பு நிற வர்ணத்தால் எழுதப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.