யாழ். மாநகர சபையின் எதிர்க்கட்சித்தலைவர் இராஜதேவன் வீடு இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளது.
நல்லூர் அம்மன் வீதியில் அமைந்துள்ள இராஜதேவனின் வீடு நேற்று முன்தினம் இரவு தாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து இராஜதேவனிடம் கேட்டபோது, வெள்ளிக்கிழமை இரவு 11மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வீட்டு முன்பக்க யன்னல் கண்ணாடியை சோடாப்போத்தலால் எறிந்து உடைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றார்.
எனினும் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். இருப்பினும் இந்த தாக்குதலானது எனக்கு எச்சரிக்கை விடுப்பதாகவே உள்ளது என்றார்.
இதேவேளை, கடந்த மாத மாநகர சபைக்கூட்டத்தில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு சபையில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற பிரேரணையினை எதிர்க்கட்சி சார்பில் இராஜதேவன் கொண்டுவந்திருந்தார். எனினும் முதல்வரும் , ஆளும் தரப்பும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இதனால் சபையில் பல வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டு இறுதியில் கூட்டமைப்பினர் கூட்டத்தில் இருந்து வெளியேறியிருந்தனர். குறித்த சம்பவத்தையடுத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.