மாநகரசபை பிரச்சினைகளை எதிர்த்து கதைப்பதற்கான வல்லமை உறுப்பினர்களிடம் இல்லை – நிஷாந்தன்

nishantahnயாழ். மாநகரசபையில் நடக்கும் பிரச்சினைகளை எதிர்த்து கதைப்பதற்கான வல்லமை தற்போதுள்ள உறுப்பினர்களிடம் இல்லை என தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் தலைவரும் முன்னாள் மாநகரசபை உறுப்பினருமான சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘மக்களினால் 2009ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றிலிருந்து அவர்கள் பல்வேறு காணி அபகரிப்புக்கள் மற்றும் சட்டவிரோத கடைகளையும் கட்டி வந்துள்ளனர்.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருப்பவர்களின் காணிகள் யாழ். மாநகரசபையினால் சுவீகரிப்பட்டமை, ஸ்ரீதர் தியேட்டர் அபகரிப்பு சம்பந்தமாக தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவைக்கு 7 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன், யாழ். நவீன சந்தைக்கு அண்மித்த பகுதியில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின் தலைமையில் 3 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. யாழ். மாநகரசபை உறுப்பினர் சுபியான் மற்றும் உறுப்பினர் சரப் உட்பட மேடைப் பேச்சாளர் தயா உள்ளிட்டவர்கள் அந்த கடைத்தொகுதிக்கு பொறுப்பாக இருக்கின்றனர்.

இக்கடைத்தொகுதி அமைப்பது தொடர்பாக யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவிடம் கேட்டபோது, இக்கடைத்தொகுதி தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கூறியதுடன், கடந்த 4 நாட்களாக தான் கொழும்பிற்குச் சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான நிலையில் யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதனுடன் கதைத்து குறித்த கடைத்தொகுதிக்கு சிவப்பு நோட்டீஸ் ஒட்டுவதற்குச் சென்றபோது, அங்கு கடை கட்டியவர்களினால் ஒட்டுவதற்குச் சென்ற உத்தியோகத்தர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

எதிர்வரும் மாதங்களில் யாழ். மாநகரசபை ஆட்சி நிறைவடையவுள்ள நிலையில், யாழ். மாநகரசபையினால் பல்வேறு சட்ட முறையற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், யாழ். மாநகரசபையில் சுகாதார தொழிலாளர்கள் மற்றும் சாரதிகளுக்கான 30 நியமனங்கள் வெற்றிடமாகவுள்ளன. இந்த வெற்றிடங்களுக்கு நியமனங்கள் யாழ். மாநகர ஆணையாளரினால் வழங்கப்படுவதாகவிருந்தபோதும், இதுவரையில் அந்த 30 நியமனங்களும் வழங்கப்படவில்லை.

இவ்விடயம் குறித்து யாழ். மாநகர ஆணையாளர் செ.பிரணவநாதனிடம் வினவியபோது, யாழ். மாநகரசபையின் ஆட்சி நிறைவடையவுள்ள நிலையில், நியமனங்கள் வழங்க வேண்டாமென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளதாக ஆணையாளர் என்னிடம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ். மாநகரசபை ஆட்சியை கைப்பற்றும் நிலைமை வருமென்றும் அதன்போது நிர்வாக கட்டமைப்புக்கள் சரியான முறையில் நடைபெறுமென்றும் தெரிவித்த நிலையில், யாழ். மாநகர சபையினால் சட்டவிரோதமான முறையில் கட்டப்படும் கடைத்தொகுதிக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வர்த்தகர்களும் நானும் இணைந்து முறைப்பாடு செய்யவுள்ளோம்.

அந்த வகையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதற்காக யாழ். நகரப்பகுதியிலுள்ள 300 வர்த்தகர்களிடம் கையொப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கையொப்பங்கள் பெறப்பட்ட பின்னர் முறைப்பாடு செய்யப்படும்’ என்றார்.

Related Posts