மாணவியை கடத்துவதாக அச்சுறுத்தி கப்பம் பெற்ற ஐவர் கைது

குடத்தனை பகுதியைச் சேர்ந்த 18 வயது பாடசாலை மாணவியொருவரை கடத்தப் போவதாக, அம்மாணவியின் தாயை அச்சுறுத்தி கப்பம் பெற்ற ஐந்து பேரை சனிக்கிழமை (06) கைது செய்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குடத்தனை பகுதியில் கணவனை இழந்த பெண்ணொருவர், கல்வி பொதுத் தராதர உயர்தரம் படிக்கும் தனது மகளுடன் வசித்து வருகின்றார்.

இந்நிலையில், அப்பெண்ணின் மகளை கடத்துவதாக அச்சுறுத்தியுள்ள ஐந்து சந்தேகநபர்கள், மகளை கடத்தாதிருக்க வேண்டுமாயின் பணம் வேண்டும் என்று கூறி, மூன்று தடைவைகளில் 75 ஆயிரம் ரூபாவை கப்பமாகப் பெற்றுள்ளனர்.

தொடர்ந்து அதேபாணியில், சனிக்கிழமையன்றும் அச்சந்தேகநபர்கள், மேற்படி பெண்ணிடம் கப்பம் பெற முயற்சித்த போது, இதையறிந்த அப்பகுதி ஆசிரியர் ஒருவர், இது குறித்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, கப்பம் வாங்குவதற்காக மேற்படி நபர்கள் வந்திருந்தவேளை, அப்பகுதியில் மறைந்திருந்த பொலிஸார், அந்த ஐவரையும் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். அத்துடன், அவர்கள் பயணித்த 3 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் உடுப்பிட்டி, வதிரி, கலிகை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22, 24, 27, 29, மற்றும் 30 வயதுடையவர்கள் என பொலிஸார் கூறினர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.