மாணவர்கள் கைதாவதை உடன் தடுத்து நிறுத்த வேண்டும். பொலிஸாரிடம் பல்கலை நிர்வாகம் கோரிக்கை.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 4பேர் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் மாணவர்கள் கைது செய்யப்படுவதனை நிறுத்தல் வேண்டுமென யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேராவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏற்கெனவே 4மாணவர்கள் கைது செய்யப்பட்டு மேலும் பல மாணவர்கள் தேடப்பட்டு வருகின்ற நிலையிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இவ் வேண்டுகோளினை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திருமதி வசந்தி அரசரட்ணம் மற்றும் பதில் துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி ஆகியோர் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் பதில் துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி தெரிவிக்கையில் தற்போது 4 மாணவர்கள் வவுனியாவில் உள்ள பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பல மாணவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேலதிகமாக தேடப்பட்டு வரும் மாணவர்களின் பெயர் விபரங்கள் பல்கலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படல் வேண்டும்.

இவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டுமாயின் அது அவர்களின் பெற்றோர்கள் ஊடாக அல்லது பல்கலை நிர்வாகத்தினரிடம் தெரியப்படுத்தல் வேண்டும்.

நள்ளிரவு வேளையில் வீடுகளிற்குச் சென்று அனைவரினையும் அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்படாமல் மாணவர்களினை விசாரணைக்குட்படுத்த வேண்டுமாயின் அதனை பெற்றோர்களுக்கோ பல்கலை நிர்வாகத்தினருக்கோ முதலில் தெரியப்படுத்தல் வேண்டும்.

அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு மேலும் பல மாணவர்களினை கைது செய்வதனை நிறுத்தல் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று துணைவேந்தர் பேரா.வசந்தி அரசரட்ணம் தலைமையிலான குழுவினரும் பெற்றோரும் வவுனிய குற்றப்புலனாய்வு அலுவலகத்தில் சென்று கைதுசெய்யப்பட் மாணவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.அதன்போது 7 நாட்களுக்குள் மாணவர்கள் விசாரணையின் பின் விடுதலைசெய்யப்படுவர் என பயங்கரவாத தடுப்பு பொலிசாரினால் உறுதியளிக்கப்படடதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இன்று காலை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் குழு ஒன்று பலாலி இராணுவத்தலைமையகத்துக்கு பேச்சுவார்த்ததைகளுக்காக விரைந்துள்ளதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன!