மாகாணசபை முறைமை தமிழர்களுக்கு தீர்வாகாது – சிவாஜிலிங்கம்

மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டாலும் அதனை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு இருக்கின்றபோதும் அதனை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துமா என்ற கேள்வி எழுவதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கம் தேர்தலை நடாத்துவதற்கு எவ்வித முயற்சியையும் எடுக்காமல் அதற்கு பதிலாக மாகாண சபைகளுக்குக் கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

எனவே இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை அடைவதற்கும் அதே சமயம் எமது பிராந்தியத்தில் சுதந்திரத்தையும் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்துவதற்கும் இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு வடக்கு- கிழக்குப் பிராந்தியத்திலுள்ள மக்களுக்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டார்.

அதேநேரம் 13வது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக நிறைவேற்றிய பின்னரே மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என ரெலோ வலியுறுத்தியுள்ளது.