“மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகாக்களான மோசடிக்கார கும்பல் விரைவில் கைதாகும்”இவ்வாறு அரசு நேற்று புதன்கிழமை அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளது.
“மஹிந்த ராஜபக்ஷ ஊழல், மோசடி, திருட்டு என கறைபடிந்த சரிதை கொண்டவர். எனவே, அவர் தன்னை கறை படியாத தலைவர் எனக் கூற முடியாது. சதாம் ஹுசைன், கடாபி, ஹொஸ்னி முபாரக் போன்ற தலைவர்களும் பல கோடி ரூபாய்களை பதுக்கி வைத்தனர். அவை இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுபோன்றே இலங்கையின் சட்டங்களில் சிக்காத வண்ணம் மிகவும் சூட்சுமமாக மஹிந்த ராஜபக்ஷ நாட்டிலிருந்து பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார்” என்று அரசு குற்றம்சாட்டியுள்ளது.
“மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மோசடிக்கார கும்பலும் சட்டத்திலிருந்து தப்பிக்க இடமளிக்கமாட்டோம். விரைவில் இவர்கள் கைதாவார்கள். மேலும், இந்த மோசடிக்காரர்களை பாதுகாக்க அமைச்சரவைக்குள்ளும் புல்லுருவிகள் சிலர் இருக்கின்றனர்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடுகளில் பதுக்கிவைத்துள்ள பணத்தை கண்டுபிடிக்க புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். வெளிநாடுகளுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான பல நடைமுறைகள் உள்ளன. எனவே, விசாரணைகள் முழுமை பெற காலதாமதமாகும். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ தனது மோசடிகளிலிருந்து தப்பிக்கவே முடியாது. விரைவில் விசாரணைகள் முடிவடையும்.
மோசடிக்காரர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள். மஹிந்த உட்பட அவரது சகாக்கள் கைது செய்யப்படுவார்கள். யார் என்ன முயற்சி செய்தாலும் மஹிந்த சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. இது தொடர்பில் மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை” – என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.