மஹிந்தவின் மாளிகையை பெறுவதற்கான பிரேரணை நிறைவேற்றம்

மகிந்த ராஜபக்ஷவினால் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்ட மாளிகையினை பெற்றுக்கொள்வதற்கான பிரேரணை வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 54வது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்றது.

அந்த அமர்வின் போது, வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குறித்த பிரேரணையினை முன்மொழிந்தார்.

வடக்கு மாகாண சபையின் வதிவிட முகாமைத்துவ பயிற்சி நெறிகளை நடாத்துவதற்கும், மாகாணத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தங்குதவற்கும், மாநாடுகளை நடாத்துவதற்கும் பொருத்தமான கட்டிட வசதி எதுவும் இல்லாத நிலையைக் கருத்திற்கொண்டு, காங்கேசன்துறையில் ஜனாதிபதி சுற்றுலா தங்குமிட மாளிகையினை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வேண்டுகோளுக்கான பிரேரணை சபையில் முன்மொழியப்பட்டு, குறித்த மாளிகையினை வடக்கு மாகாண சபைக்கு கையளிக்க வேண்டுமென அதி மேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதன்போது, குறித்த மாளிகையினை கேட்டு யாழ். பல்கலைக்கழகமும் வேண்டுகோள் விடுத்துள்ளதால், பிரேரணையினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து, அனுமதியினைப் பெறுவோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

இருந்த போதும், குறித்த பிரேரணை சபையில் முன்மொழியப்பட்ட போது, வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஏக மனதாக ஏற்றுக்கொண்டதற்கு அமைவாக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Posts