ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த 500 இராணுவத்தினரைக் கொண்ட அணியினரை உடனடியாக விலகிக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த அறிக்கையை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என அறியமுடிகின்றது.
மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 130 பொலிஸ் அதிகாரிகள் தவிர, 500 இராணுவத்தினரும் பணியாற்றுவதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதற்கு அனுமதியளிப்பதற்கான ஆவணம் பொலிஸ் தலைமையகத்துக்கு வந்ததையடுத்தே, இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
எனினும், இராணுவத் தலைமையகத்திடமோ, பாதுகாப்பு அமைச்சிடமோ, படையினர் ஒதுக்கப்பட்டது குறித்த எந்த முறையான ஆவணங்களும் இல்லை என்று அரச தகவல் ஒன்று கூறுகின்றது.
முன்னாள் ஜனாதிபதிக்காக அரசு எவ்வளவு நிதியைச் செலவிடுகிறது என்பது பற்றிய அறிக்கை ஒன்றை அமைச்சரவையிடம் சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார். இதற்கமையவே ரவி கருணாநாயக்க இந்த அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். இதையடுத்து, மற்றொரு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு வழங்குவதற்கு இணையான பாதுகாப்பு மற்றும் சலுகைகளையே மஹிந்தவுக்கும் வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த 500 இராணுவத்தினரைக் கொண்ட அணியினரை உடனடியாக விலகிக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ள விவகாரம் தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜயவீரவிடம் வினவியபோது, “இந்த விடயம் பற்றி பாதுகாப்பு அமைச்சிடமிருந்து இன்றும் உத்தியோகபூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் இராணுவத்துக்கு விடுக்கப்படவில்லை” என்று கூறினார்.
 
					



 
												
							 
												
							 
												
							 
												
							 
												
							