மஹிந்தரின் வருகையோடு மீண்டும் யாழ்.மண்ணில் பீல்ட் பைக்

ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்துக்ககான விஜயத்தை ஒட்டி யாழ்ப்பாணத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. விடுதலைப்புலிகளுடனான போர்க்காலங்களைப் போல் யாழ். நகரை அண்டிய பகுதிகளில் இராணுவ மோட்டார் சைக்கிள் படையினர் உட்பட பல நூற்றுக் கணக்கான படையினரும் பொலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.கண்களை மூடிக் கவசமிட்ட பீல்ட் பைக் படையினர் பொது மக்களைக் கிலி கொள்ள வைக்குமளவுக்கு நகர வீதிகளில் உறுமியபடி வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இடையிடையே சந்திகளில் தரித்து முகத்தை மூடி துப்பாக்கியை நீட்டியபடி நிற்கும் கோலத்தினால் யாழ். நகரை அண்டிய – மத்திய கல்லூரி, வேம்படி மகளீர் கல்லூரியை அண்டிய பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்திருக்கின்றது. பல நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும், பொலீஸாரும் பிரதேசமெங்கும் குவிக்கப்பட்டுள்ளனர்.இதே வேளை -ஜனாதிபதியின் வருகை இடம்பெறவுள்ள யாழ்.மத்திய கல்லூரியை அண்டிய பகுதிகளிலும், யாழ். புற நகர் பகுதிகளிலும் சிவில் உடையில் பெருமளவு பொலீஸார் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது.