மருத்துவமனையில் டாக்டர் இல்லாததனால் பிரசவ வலியினால் துடித்த தாயும் சிசுவும் பலி

பிரசவ வலி ஏற்ப்பட்ட பெண்ணிற்கு சிகிச்சை அளிப்பதற்கு வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் குறித்த பெண்ணும் கருவில் இருந்த சிசுவும் உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ் நயீனாதீவில் இடம்பெற்றுள்ளது.

நயீனாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வரும் அதேவேளை அவசர சிகிச்சையினை அப் பகுதி மக்கள் பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் இல்லாத காரணத்தினால் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை இரவு நயீனாதீவினைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டதன் காரணமாக பிரதேசவைத்திய சாலைக்கு கொண்டு  செல்லப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் அங்கிருந்து  வேலணை பிரதேச வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லும்படி வைத்தியசாலை நிர்வாகத்தினர்  தெரிவித்துள்ளனர்.

சிறிய படகு ஒன்றின்மூலம்  வேலணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குறித்த பெண்ணின் நிலை மோசமாக இருந்ததன் காரணத்தினால் அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார்

அதிதீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண்சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததுடன் குறித்த பெண்ணின் கருவில் இருந்த நிறைமாத சிசுவும் உயிரிழந்துள்ளது.