மருத்துவச் சபையின் முன்பாக தோன்ற ஆசிரியர்கள் தயக்கம்

teacher_sadமருத்துவச் சான்றிதழ்களின் அடிப்படையில் இட மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும் ஆசிரியர்கள் மருத்துவச் சபை முன்னிலையில் கொண்டுவரப்படவிருப்பதால் சிலர் அதன் பக்க விளைவைக் கருத்தில் கொண்டு மருத்துவச் சபையின் முன் தோன்றுவதை தவிர்த்து இடமாற்றத்தை ஏற்க முன்வந்துள்ளனர்.

மருத்துவச் சபை முன்னிலையில் கொண்டுவரப்படும் ஆசிரியர்களில் கற்பிப்பதற்குத் தகுதி இல்லாத ஆசிரியர்கள் கட்டாய ஓய்வில் செல்ல வேண்டும். அவ்வாறு இல்லாவிடினும் அவர்களின் மருத்துவத் தகைமை தொடர்பான சான்றுப் பத்திரம் சுயவிவரக் கோவையில் இடம்பெறுவதால் எதிர்காலத்தில் பதவி உயர்வு தொடர்பான தெரிவுகளின் போது அது எதிர்பாராத பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவச் சபையின் முன்தோன்றுவதை தவிர்க்க சிலர் முன்வந்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் இருந்து குறித்த வயது நிலைக்கு உட்பட்ட வெளிமாவட்ட சேவையை பூர்த்தி செய்யாத ஆசிரியர்கள் பதில் ஈட்டு அடிப்படையில் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப் படும் போது தமது உடல் நலன் குறைவு தொடர்பாக மருத்துவச் சான்றுகளுடன் மேல் முறையீடு செய்துள்ளனர்.

மருத்துவச் சான்றிதழ்களுடன் மேல் முறையீடு செய்த ஆசிரியர்கள் வடக்கு மாகாண மாவட்ட மருத்துவச் சபை முன்னிலையில் கொண்டுவரப்படவுள்ளனர். இதற்க்கான ஏற்பாடுகளை வடக்கு மாகாண கல்வி அமைச்சும் வடக்கு கல்வித் திணைக்களமும் மேற்கொண்டு வருகின்றன.

மருத்துவச் சபையின் இறுதி அறிக்கையை அடுத்து இடமாற்றச் சபை இறுதி முடிவை மேற்கொள்ளவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor