மன்னாரில் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த பொலிஸார்!

மன்னார் தனியார் பஸ் நிலையத்தில் சிவில் உடையில் நின்ற புலனாய்வு பொலிஸார் ஒருவர் பெண்ணொருவரின் கையைப் பிடித்து இழுத்தார் என்று தெரிவித்து அப்பகுதி மக்கள் கூடி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்றது.

மன்னார் தனியார் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள உணவகத்தில் மன்னார் புலனாய்வு பொலிஸார் இலவசமாகவே உணவு, புகைப்பொருட்களை கோரி கெடுபிடியில் ஈடுபடுவர் என்றும், அவர்களுக்குப் பயந்து தாம் இலவசமாகவே அந்த பொருள்களை வழங்குவதென்றும் கடைக்காரர்கள் தெரிவித்தார்.

இவ்வாறு குறித்த கடையில் சிகரெட் கோரிய பொலிஸ் புலனாய்வாளர் ஒருவரிடம் அத்தினத்தில் கடையில் நின்றவர் பணம் கோரியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொலிஸார், 21 வயது நிரம்பாத ஒருவரை குறித்த கடையில் சிகரெட் வாங்க அனுப்பி, கடை மீது வழக்கு தொடர முற்பட்டுள்ளனர்.

சம்பவ தினத்தன்று கடையில் கடை உரிமையாளரின் மனைவியே நின்றுள்ளார். இதனால் சம்பவம் குறித்த அவர் தனது கணவருக்கு தெரியப்படுத்தியதும் அங்குவந்த கணவர் தனது பெயரிலே கடையுள்ளது. என்மீது வழக்கு தொடரலாம். மனைவி பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று கோரியுள்ளார்.

அதை மறுத்த பொலிஸார், குறித்த பெண் வீட்டுக்கு புறப்பட்டபோது பொது இடத்தில் அவரது கையைப் பிடித்து மறித்து தகராறில் ஈடுபட்டனர் என்று கூறி அப்பகுதி கடையுரிமையாளர்கள், சம்பவத்தை அவதானித்த பொதுமக்கள் தமது எதிர்பபை வெளிப்படுதத்தினர்.

இதனை அடுத்து அப்பகுதியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முறுகல் ஏற்றபட்டது. இதனை அடுத்து உணவகத்தின் உரிமையாளர் குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்படு செய்துள்ளார். இதேவேளை கடை உரிமையாளருக்கு எதிராக சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்தார் என்ற வழக்கொன்றும் மன்னார் பொலிஸாரினால் பதிவுசெய்யப்பட்டுள்ளது.